ஈரோடு தமிழன்பன்

     ஈரோடு தமிழன்பன் ஒரு தமிழகக் கவிஞர் ஆவார். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளாராக பணியாற்றியவர். தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.

பல விருதுகளை வென்றவர், தனது சுயாதீனமான பார்வைகள் மூலம் சமூகப் பிரச்சினைகளுக்கான தனது மனித மற்றும் மனிதாபிமான அணுகுமுறையை சிந்தித்து, ஒரு புதிய பழைய ஒழுங்கைப் பற்றிய அவரது பார்வை மற்றும் அவரது கலைத் தேர்ச்சி ஆகியவற்றின் மூலம் முதல் வரிசையின் கவிஞராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவரது கவிதைத் தொகுப்புகள் “வனகம் வள்ளுவ” (வணக்கங்கள் வள்ளுவா), அவரது கவிதைத் தொகுப்பான வனக்கம் வள்ளுவாவுக்காக தமிழுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இந்த கவிதைகள் சங்கம் காலத்திலிருந்தே தமிழ் இலக்கிய பாரம்பரியத்தின் தொடர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல புதிய திட்டங்களைப் பயன்படுத்தி திருக்குரலின் நவீன காலத்தின் பொருத்தத்தை ஆராய்கின்றன. தூர்தர்ஷனுக்கான செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

காணொளி

சாதனைச் சிறப்பு

தந்தை பெரியாரிடமிருந்து பகுத்தறிவுவாதத்தையும், மார்க்சிடமிருந்து பொதுவுடைமையையும், பாரதியிடமிருந்து தேசியத்தையும், பாரதிதாசனிடமிருந்து தமிழ்த் தேசியத்தையும், தாகூரிடமிருந்து இயற்கைவாதத்தையும், பாப்லோ நெருதா விடமிருந்து சர்வதேசியத்தையும், வால்ட் விட்மனிடமிருந்து யாப்புப் புதுமையையும், பாஷோவிடமிருந்து சொற்செட்டையும் நம் சித்தர்களிடமிருந்தும் ஜென்னிடமிருந்தும் மெய்யியலையும், தமிழ் மரபிலிருந்து யாப்பியலையும் பெற்றுக் கொண்டு, தாம் பிறந்த சென்னிமலை மண்ணின் தறியோசை களிடமிருந்து சந்தங்களையும் சேகரித்துக்கொண்டு தமக்கெனத் தனித்துவமான கவிதைப் பாட்டையை அமைத்துக் கொண்டு தொடர்ந்து அதில் பயணித்துக்கொண்டிருப்பவர் அவர்.

நூற்றிருபது ஆண்டு வரலாறு கொண்ட மறுமலர்ச்சித் தமிழ்க் கவிதையைத் தமது இடையறாத தொடர்ச்சியான கவிதைப் படைப்பால் மாணவப் பருவந்தொட்டுக் கடந்த எழுபது ஆண்டுகளாக வளப்படுத்திவரும் முதல் கவிஞர் அவர்.

தமிழில் அதிக அளவில் கவிதைத் தொகுதிகளை – 60க்கும் மேற்பட்ட தொகுதிகளையும்- 6 பெருந்தொகுதிகளையும் வெளியிட்ட முதல் கவிஞர் அவர்.

‘உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்… வால்ட் விட்மன்! ‘(1998) எனும் கவிதைத் தொகுதிமூலம் புதுக்கவிதையில் முதல் பயண இலக்கியம் படைத்த முதல் கவிஞர் அவர்.

2000இல் எழுதி 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற வணக்கம், வள்ளுவ! என்னும் கவிதைத் தொகுதிவழிப் புதுக்கவிதையிலான முதல் திறனாய்வு நூலை எழுதிய முதல் கவிஞர் அவர்.

ஒரு வண்டி சென்ரியு (2001) எனும் கவிதைத் தொகுதிவழி ஜப்பானியக் கவிதை வடிவங்களுள் ஒன்றான சென்ரியுவைத் தமிழில் அறிமுகப்படுத்திய முதல் கவிஞர் அவர்.

ஜப்பானியக் கவிதை வடிவங்களுள் ஒன்றான ஹைக்கூவைத் தமிழில் பிரபலப்படுத்திய முதல் கவிஞர் அவர்.

லிமெரிக், ஹைகூ ஆகிய கவிதை வடிவங்களை இணைத்து டெட் பாக்கர் அறிமுகப்படுத்திய கவிதை வடிவமான லிமெரைக்கூவைச் சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள் (2002) என்னும் கவிதைத் தொகுதி வாயிலாகத் தமிழில் படைத்த முதல் கவிஞர் அவர்.

2009இல் நிகழ்ந்த ஈழப்போரில் கொத்துக்கொத்தாய்த் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது அந்த இனப் படுகொலையைக் கண்டித்துத் தமிழகத்தில் பலரும் எழுத முன்வராத நிலையில் நெஞ்சுரத்துடன் என் அருமை ஈழமே! (2009) என்னும் கவிதைத் தொகுதியைத் துணிச்சலாய் எழுதி வெளியிட்ட முதல் கவிஞர் அவர்.

2012இல் வெளிவந்த கஜல் பிறைகள் வாயிலாகப் பாடதக்க கஜல் கவிதைத் தொகுதியைப் படைத்த முதல் கவிஞர் அவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தால் இரண்டு முறை தேசியக் கருத்தரங்கு நடத்தப்படப் பொருண்மைக்களமாக விளங்கிய கவிதைகளைப் படைத்த முதல் கவிஞர் அவர்.

ஒரு கூடைப் பழமொன்ரியூ (2014) வழியாகப் பழமொழியையும் சென்ரியூவையும் இணைத்துப் பழமொன்ரியு எனும் கவிதை வடிவத்தை முதன்முதல் உருவாக்கி அறிமுகப் படுத்திய முதல் கவிஞர் அவர்.

பாப்லோ நெருதா எழுதிய Book of Questions என்னும் வினாக்களாலான கவிதைத் தொகுதியை முன்மாதிரியாகக் கொண்டு கனாக் காணும் வினாக்கள் (2004), இன்னும் சில வினாக்கள் (2015) எனும் வினாக்களாலான கவிதைத் தொகுதிகள் இரண்டு இயற்றிய முதல் கவிஞர் அவர். பிறப்பால் ஆங்கிலேயராகவும், வாழிடத்தால் சீனராகவும் வாழும் முறையால் தமிழராகவும் வாழ்ந்துவருபவரும் – இங்கிலாந்தில் பிறந்து ஹாங்காங்கில் வாழ்ந்துவருபவருமான பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ் இவ்விரு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Poems of Questions என்னும் பெயரில் ஒரே நூலாக வெளியிட்டுள்ளார். இப்படி ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரால் இக்காலக் கவிதை ஆங்கிலத்தில் முதன்முதலில் ஒரு மொழிபெயர்ப்புக் காண மூலநூல் தந்த முதல் கவிஞர் அவர். இதே நூலுக்குப் பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ் அவர்களும் லொரைன் போக் (Loraine Bock) என்னும் ஸ்பானியப் பெண்மணியும் இணைந்து Poemas de Preguntas என்னும் மகுடம் தாங்கிய ஸ்பானிய மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. இக்காலத் தமிழ்க் கவிதை ஸ்பானிய மொழியில் முதன்முதலில் ஒரு மொழிபெயர்ப்புக் காண மூலநூல் தந்த முதல் கவிஞர் அவர்.

2017 நவம்பர் 8இல் அமெரிக்காவில் டல்லாஸ் நகரிலுள்ள மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கவிஞர் தி. அமிர்தகணேசன் முயற்சியால் ஈரோடு தமிழன்பனின் 1000 கவிதைகளை வாசிக்கும் கவிதைத் திருவிழா நடைபெற்றது. அமெரிக்காவில் நடைபெற்ற முதல் கவிதைத் திருவிழா மட்டுமன்றி இப்படியொரு திருவிழா எடுக்கப்பட்ட முதல் கவிஞரும் ஈரோடு தமிழன்பனே ஆவார்.

2019 செப்டம்பர் 28இல் வட அமெரிக்க வானொலியில் தமிழன்பன் பிறந்தநாள் வானலையில் அமெரிக்கத் தமிழர்கள் பலர் தமிழன்பன் கவிதை வாசிப்பு நிகழ்த்திக் கொண்டாடினர். இப்படியொரு பிறந்தநாள் திருவிழா எடுக்கப்பட்ட முதல் கவிஞரும் ஈரோடு தமிழன்பனே ஆவார்.

இவ்வாறு எண்ணற்ற முதல்களுக்கெல்லாம் முதல் எனும் முத்திரை கொண்ட – முதன்மைச் சிறப்பு மிக்க ஒரே கவிஞர் மகாகவி ஈரோடு தமிழன்பன் ஆவார். இதற்குக் காரணம் ,முத்தினிடத்து ஒளியும் ,காற்றினிடத்து இசையும், பூவினிடத்து மணமும் குடிகொண்டிருப்பதைப்போலத் தமிழன்பனிடத்துக் கவிதை குடிகொண்டிருப்பதே ஆகும்.